கரும்பு விவசாயி என்ற சின்னத்தை மக்களிடையே முன்வைத்து பிரச்சாரம் செய்து அறிமுகப்படுத்தி இருந்த நிலையில் நாம் தமிழருக்கு இந்த நாடாளுமன்றத்தேர்தலில் தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தச் சின்னம் கிடையாது என கையை விரித்தது தேர்தல் ஆணையம். கடைசியில் ஒலிவாங்கி சின்னத்தில்தான் களமிறங்கினர்.
20 ஆண், 20 பெண் வேட்பாளர்கள் என தங்கள் வழக்கத்தை ஒட்டி வேட்பாளர்களைக் களமிறக்கினர். இந்த தேர்தலிலும் தனித்து்ப்போட்டி என்றபோதிலும் அக்கட்சிக்கு இது சிறந்த தேர்தல் முடிவுகளே கிடைத்துள்ளன. நாகப்பட்டினத்திலும் திருச்சியிலும் மூன்றாம் இடம் பெற்று, பாஜகவை நான்காம் இடத்துக்குத் தள்ளியிருக்கிறார்கள் அக்கட்சி வேட்பாளர்கள். அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். ஆயினும் 8.1 சதவீத வாக்குகளைக் குவித்து மாநில அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை எட்டிப்பிடித்துள்ளனர். பதினான்கு ஆண்டுகால கட்சிக்கு இது முதல் படி என்று வைத்துக்கொள்ளலாம். 2016 –இல் 1 சதவீத வாக்குகள், 2019-இல் 3.8 சதவீத வாக்குகள், 2021-இல் 6.7 சதவீத வாக்குகள் என்று அதிகரித்துக் கொண்டே வருவதைக் காணமுடிகிறது.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்பதில் சமரசம் கொள்ளாமல் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருந்துவருகிறார். அதனால் எல்லா தேர்தல்களிலும் தனித்தே நின்று போட்டியிட வேண்டிய கட்டாயம். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் கூட்டணி என்ற கம்பியைப் பிடிக்காமல் தேர்தல் அரசியல் என்ற பேருந்தில் அவர் நின்று கொண்டே வர முடியும்? அதிகாரத்துக்கு சிலராவது வந்தால்தானே கட்சியைத் தொடரமுடியும் என்ற கேள்விகள் நாதகவை நோக்கிக் கேட்கப்படுகின்றன. ஆனாலும் அதிகாரத்துக்காக இந்தக் கொள்கையை விட்டுவிட முடியாது என்பதில் அக்கட்சித் தலைமை காட்டும் உறுதி சமீப கால தமிழக அரசியலுக்கு முற்றிலும் புதியதே. இக்கட்சிக்கு முன்பாக மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று சொல்லி எட்டு சதவீத வாக்குகளைப் பெற்ற தேமுதிக அந்நிலைப்பாட்டில் இருந்து மாறி அதிமுகவுடன் கூட்டணி வைத்து அதிகாரத்தைப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாலும் அதற்கடுத்த தேர்தல்களில் அடியோடு காணாமல் போனதையும் சுட்டுக்காட்டுகிறார்கள். ஆனால் நாதகவின் இனக்கொள்கை கடும்போக்கு, அதை பிற எந்த கட்சியுடனும் அண்ட விடாது என்பதே எதார்த்தம் எனக் குறிப்பிடுகிறார் அரசியல் நோக்கர் ஒருவர்.
இந்த தேர்தலில் அக்கட்சியின் 12 வேட்பாளர்கள் ஒரு லட்சம் வாக்குகளுக்கு அதிகம் பெற்றுள்ளனர். ஏழு பேர் 90,000 முதல் ஒரு லட்சத்துக்குள் பெற்றனர். சிவகங்கையில் போட்டியிட்ட வேட்பாளர் அதிகபட்சமாக 1.63 லட்சம் வாக்குகளைப் பெற்றார்.
நாதகவைப் பொறுத்தவரை இது நான்காவது தேர்தல்(உள்ளாட்சி, இடைத் தேர்தல்கள் தவிர்த்து). அடுத்து வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் ஐந்தாவது. தேர்தலுக்குத் தேர்தல் புதுமுக வேட்பாளர்களை அதிகம் களமிறக்கிக்கொண்டே இருக்கிறார். தேர்தல் அனுபவம் பெற்றவர்களை, ஒரு தேர்தலில் நின்று தொகுதிக்குள் அறிமுகம் பெற்றவர்களை மறுதேர்தலில் நிறுத்தும் விகிதம் மிகக் குறைவாகவே இருக்கிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் 117 பெண்களையும் 117 ஆண்களையும் நிறுத்தப்போவதாகச் சொல்லிய சீமான் அதில் 150க்கும் மேல் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்போவதாகச் சொல்லி இருக்கிறார். 2021-இல் போட்டியிட்ட பலர் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்காத நிலையில் அதிருப்தி அடையவே செய்வார்கள். கட்சி முளைவிடும் போதே இத்தகைய அணுகுமுறை உதவுமா என சீமான் யோசிக்கவேண்டும். உள்ளூரில் அறிமுகம் பெற்று தலைவர்களாக உருவாக இந்த தேர்தல்கள் மூலம் முயற்சி செய்யும் இளைஞர்களை அவர் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என கட்சியின் மூத்த உறுப்பினர் நம்மிடம் பகிர்ந்தார்.
நாதகவுக்குள் சொல்லப்படும் இன்னொரு விஷயம் மாவட்ட அளவில் இருக்கும் பொறுப்பாளர்களுக்குத் தெரியாமலேயே அங்கே ஒரு நாதக தம்பி கட்சி சார்ந்து ஒரு நிகழ்வை நடத்திவிட முடியும். கேட்டால் நான் அண்ணனிடம் பேசிவிட்டேன் என்று அவர் பதில் சொல்லிவிடுவார். கட்சித் தலைமை நேரடியாக தொண்டர்களுடன் தொடர்பு வைத்திருப்பதில் தவறில்லை. ஆனால் நிகழ்ச்சிகள் என்று வரும்போது கட்சிக் கட்டமைப்பு பேணப்படவேண்டும். அதில் சீமான் அக்கறை காட்டுவதில்லை என்ற குறை சொல்லப்படுகிறது.
ஒருபக்கம் சீமானுடன் முரண்பட்டு நன்கறியப்பட்ட நாதக முகங்கள் கசப்புடன் வெளியேறிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் உக்கிரமாகக் களமாடும் இளைஞர்கள் நாதக பக்கம் வந்துகொண்டு இருக்கிறார்கள். நாதக என்றால் சீமான் மட்டும்தான் என்ற நிலைமாறி மேலும் ஜனநாயகமும் கொள்கைத் தளர்வு மூலம் அனைவரையும் அரவணைக்கும் தன்மையும் சேருமேயானால் இக்கட்சியை மேலும் வளர்த்தெடுக்க முடியும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால் மொழிச்சிறுபான்மையினரை மையநீரோட்டத்தில் இருந்து ஓரத்துக்குத் தள்ளுவது என்ற கொள்கை மறுபரிசீலனை செய்யப்படுவது அவசியம். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருவேளை புதிய கட்சியான தவெக வுடன் நாதக கூட்டணி வைக்கலாம் என்ற ஆசை நாதக உறுப்பினர்களிடம் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் அந்த ஆசை நிறைவேறுமா? அதிலிருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் களையப்படுமா என்பனவெல்லாம் பெரிய கேள்விகள்.